இந்துத்துவவாதிகள் தான் நந்தேத் குண்டுவெடிப்புக்கு காரணம் - ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரின் வாக்குமூலம்
நந்தேத்-இல் உள்ள ஆர்.எஸ்.எஸ்.-ஐ சார்ந்த ஒருவரது வீட்டில் 16 ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டுகளை செய்ய பழகிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக குண்டுகள் வெடித்தது. இந்த சம்பவத்தில் இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளைச் சார்ந்த பல மூத்த தலைவர்களின் தொடர்பு இருப்பதாக, அந்த அமைப்பின் முன்னாள் மூத்த அதிகாரியான யஷ்வந்த் ஷிண்டே என்பவர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த யஷ்வந்த் ஷிண்டே 25 ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ்.-இல் உறுப்பினராக இருந்தவர். மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களொடும் தொடர்பில் இருந்தவர். நந்தேத் குண்டுவெடிப்புக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, VHP - விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த ஒரு மூத்த அதிகாரி, நாடு முழுவதும் இப்படி பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான பயிற்சி முகாம்களை பற்றி தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
நந்தேத் குண்டுவெடிப்பு 2006 ஏப்ரல் 4ம் தேதி இரவு நடந்த குண்டுவெடிப்பாகும். இந்த வழக்கை ATS - தீவிரவாத தடுப்புப் படையிடமிருந்து கைப்பற்றிய சி.பி.ஐ., லக்ஸ்மன் ராஜ்கோந்த்வார் என்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரின் வீட்டில் (குண்டுகள் செய்ய பயிற்சி எடுக்கும்போது) தவறுதலாக குண்டுவெடிப்பு நடந்ததாக கூறுகின்றது.
இந்த நிகழ்வில் ராஜ்கோந்த்வாரியின் மகன் நரேஷ் மற்றும் VHP - விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த ஹிமான்ஷூ பன்சே ஆகியோர் கொலப்பட்டனர். அவுரங்காபாத்திலுள்ள மசூதிகளில் குண்டுவைக்க இந்த வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. கூறுகின்றது.
ஹிமான்ஷூ பன்சேவும், யஷ்வந்த் ஷிண்டேவும் 1999ம் ஆண்டு முதலே நண்பர்கள். அப்போது ஷிண்டே கோவாவின் VHP - விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் முழுநேர உறுப்பினராக இருந்தார். 1999ல் கோவாவில் நடந்த ஒரு கூட்டத்தில், பன்சேவும் அவரது ஏழு நண்பர்களும் ஆயுதப்பயிற்சி மேற்கொள்ள ஒப்புக் கொண்டதாகவும், அவர்களுக்கு ஜம்முவில் இந்திய ராணுவ வீரர்களால் ஆயுத பயிற்சி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஷிண்டே.
இந்த வழக்கில் ஷிண்டே அரசு தரப்பு சாட்சியாக இருக்கவில்லை. “இனியும் என்னால் அமைதியாக இருக்க முடியாது” என்று கூறி தானாக முன்வந்து இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
The Wire செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 16 ஆண்டுகளாக, மோகன் பகவத் உட்பட எனக்கு தெரிந்த எல்லா ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால் யாரும் என்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. எனவே எனக்கு தெரிந்த உண்மைகளை நானே நீதிமன்றத்திற்கு சொல்ல தயாராக இருக்கின்றேன்.” என்று கூறுகின்றார்.
நந்தேத் நீதிமன்றத்தில் ஷிண்டே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கமேஷ்வர் டெல்மெட் The Wire செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, “ஷிண்டே இத்தனை ஆண்டுகாலம் கழித்து இந்த உண்மைகளை ஏன் சொல்ல வேண்டும் என்ற சந்தேகம் எனக்கிருந்தது. அதை நான் அவரிடமே கேட்டேன். அதற்கவர், ‘என்னுடைய உயிருக்கு அச்சுருத்தல் இருக்கின்றது. ஆனால் இதற்கு மேலும் அமைதியாக இருக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை” என்று கூறினார்.
ஷிண்டே தனது 18வது வயதில் ஆர்.எஸ்.எஸ்.-இல் சேர்ந்தார். அவருக்கு இப்போது வயது 49. தற்போது அனைத்து இந்துத்துவ அமைப்புகளிடமிருந்தும் அவர் ஒதுங்கியிருக்கின்றார். இந்த இந்துத்துவ அமைப்புகள் எதுவும், ஹிந்து மதத்திற்காக வேலை செய்யவில்லை. மாறாக ஆளும் கட்சியின் கைப்பொம்மைகளாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்கிறார் ஷிண்டே.
1995ல் ஜம்முவில் உள்ள ரஜோரி என்ற பகுதிக்கு பரூக் அப்துல்லாஹ் வந்த போது, அவரை தாக்கிய குற்றத்திற்காக ஷிண்டே Public Safety Act படி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஆச்சரியப்படும் வகையில் அப்போது நடந்த அந்த குற்றத்திற்கு இப்போது அவர் கூறிய வாக்குமூலத்தில் தான் பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். மேலும், அந்த நிகழ்விற்கு பிறகு தனக்கு 1999ல் பஜ்ரங்தள் அமைப்பின் மும்பை பிரிவின் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஷிண்டே தான், ஆயுத பயிற்சி மற்றும் குண்டுகளை தயாரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். “தீவிரவாத செயல்பாடுகளை தான் ஏற்கவில்லை. ஆனால் இந்த பயங்கரவாத செயல்களை செய்வதெல்லாம் யார், யார் என்று அறிந்துகொள்ள நான் இந்த சதித்திட்டத்தில் பங்கேற்றேன்” என்கிறார்.
மேலும், “2004ல் நடந்த பர்பானி குண்டுவெடிப்பு மற்றும் ஜால்னா மசூதி குண்டுவெடிப்பு ஆகிய இரண்டு வழக்குகளில் கையாண்ட செயல்முறைகளே, நந்தேத் குண்டுவெடிப்பு வழக்கிலும் கையாளப்படுகிறது. அந்த இரண்டு வழக்குகளின் குற்றவாளிகள் ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனார். எனவே நீதிமன்றத்தின் நடக்கும் நந்தேத் வழக்கு தொடர்பாக மட்டுமே என்னுடைய கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றேன்” என்று ஷிண்டே கூறுகின்றார்.
- The Wire
அஷ்ரப் அலீ
03/09/2022
(நந்தேத் குண்டு வெடிப்புகள் மற்றும் இதர குண்டு வெடிப்புகள் குறித்து விரிவாக படிக்க "கர்கரேயை கொலை செய்தது யார்?" என்று நூலை அனுகவும். தொடர்புக்கு : 8248208144

Comments
Post a Comment