ஆப்கானிஸ்தான் முஜாஹித்களும் ரஷ்ய ஆட்சியாளர்களும்!
அன்று ரஷ்யப் பேரரசு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. ஆப்கானிஸ்தானை அரை நொடியில் கையகப்படுத்தி எங்கள் செங்கொடியைப் பறக்கவிடுவோம் என முண்டா தட்டியது. அன்றைக்கு இருந்த இரண்டு வல்லரசுகளில் ஒன்று ரஷ்யா. அப்போது அது (USSR) United Soviet Socialist Republic ஒன்றிணைந்த சோவியத் பொதுவுடைமை குடியரசு.
பத்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் எல்லா கபளீகரங்களையும் செய்தது ரஷ்யா. அப்பாவி மக்களை முடிந்தமட்டும் வேட்டையாடியது. அங்கே அல்லாஹ்வை மட்டுமே நம்பி நின்ற முஜாஹித்கள் தந்த, இழப்புகளைத்தாளாமல் அசிங்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறியது.
அப்போது அதாவது 1989 முதல் 1991 வரைக்கும் நடந்த நிகழ்வுகளில், ரஷ்ய வல்லரசு உடைந்தது என்றுதான் வெளி உலகத்திற்குத் தெரியும். ஆனால் அதன் வீழ்ச்சியின் முழு வரலாறும் நமக்கு வந்து கிடைத்திடவில்லை.
உண்மைகள் காலம் தாழ்த்தியேனும் வெளியேவரும் என்ற அடிப்படையில், இப்போது சோவியத் ரஷ்யா வீழ்ந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பல தகவல்கள் வெளியே வந்துள்ளன. இதை அன்று ரஷ்யாவின் தோல்விக்குத் தலைமை தாங்கிய, மைக்கே கோர்பசெவ் தனது நினைவலைகளில் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் மிகவும் முக்கியமானது, சோவியத் ரஷ்யாவிலிருந்து பல பகுதிகள் விடுதலையைத் தேடியது. கம்யூனிசம் இனி உதவாது என அதைத் தூக்கிப்போட்டது.
1991ல் கொடியின் வர்ணத்தை மாற்றினார்கள். வெள்ளை - நீலம் - சிவப்பு என மாற்றம் பெற்றது. அதற்கு முன்னர் இருந்த கொடியிலிருந்து மாறுபட்டது. இது கம்யூனிச காலத்திற்கு முன்னால் இருந்த கொடி என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா கம்யூனிசத்தின் பிடியிலிருந்து வீழ்ந்துவிடாமலிருக்க பழைய கோர்பசெவ்-ன் ஆட்சியைக் கவிழ்க்க கம்யூனிஸ்டுகள் ஓர் ஏற்பாடு செய்தார்கள். அவர்களால் முடியவில்லை. இப்படி ரஷ்யா அல்லோல கல்லோலப்படவே அவர் டிசம்பர் 8,1991ல் இராஜினாமா செய்தார்.
USSR என்ற ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யா உடைந்து Common Wealth of Independent States என்றானது.
அதாவது பல நாடுகளின், எல்லாவிதத்திலும், சுதந்திரம்பெற்ற நாடுகளின் குழுமம் என்றானது.
அணு ஆயுதங்கள்;
இதில் மிகவும் வேதனையானது என்னவெனில் ரஷ்யாவின் மொத்த அணுசக்தியின் இருப்பிடமான, கசகஸ்தான் தனிநாடாக ஆகிப்போனது.
அங்கு அணு ஆற்றலின், திறமைமிகு விஞ்ஞானிகளாக இருந்தவர்கள், முஸ்லிம்கள். அவர்கள் ஒருபோதும் தாங்கள் முஸ்லிம்கள் என்ற எண்ணத்தோடு வாழ்ந்ததில்லை. அவர்கள், தங்களைப் பிறவி கம்யூனிஸ்டுகள் என்ற எண்ணத்திலும், சிந்தனையிலும் வாழ்ந்தார்கள்.
கம்யூனிஸ்ட் ரஷ்யாவைப் பலப்படுத்திடவே அவர்கள் அணு ஆயுதங்களை மேற்கொண்டார்கள், சாதித்தார்கள்.
ஆப்கானிஸ்தானோடு மோதிய 10 ஆண்டுகளாக அவர்கள், முஜாஹித்களின் கதைகள், வீரம், தியாகம் இவற்றைக் கேட்டுக்கேட்டு தாங்களும் முஸ்லிம்கள் தாம் என்பதை உணர்ந்தார்கள். இப்போது ரஷ்யாவின் முழுமையான வீழ்ச்சியும், ரஷ்ய தலைவர்கள் இனி கம்யூனிஸம் கதைக்குதவாது என கம்யூனிசத்தை தூக்கி வீசியதும், இவர்கள் தங்களின் மார்க்கத்தை நோக்கி நகர்ந்திடும் வாய்ப்பை பெற்றார்கள்.
ரஷ்யா வல்லரசாக இருந்தபோது, அவர்களுக்கு இந்த வாய்ப்பு இருந்திடவில்லை.
அப்போது (1991) ரஷ்யாவின் அணு ஆயுத வலிமை பறிபோய்விட்டது. அது முஸ்லிம்களின் கைகளில் கிடைத்திடும் வாய்ப்பிருக்கின்றது என்றெல்லாம் பதறினார்கள் ரஷ்யர்கள்.
தங்கள் பரம்பரை எதிரியான அமெரிக்காவை அழைத்து, இந்த அணு ஆயுத விஞ்ஞானிகளை நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள் அல்லது கொன்றுவிடுங்கள் என்று கூறினார்கள்.
பின்னர் யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாமல் பல விஞ்ஞானிகள் கொலையும் செய்யப்பட்டார்கள். இதனை நாம் நமது வாசகர்களுக்கு "வைகறை வெளிச்சம்" இதழ் வழி தந்திருக்கின்றோம். ஆனால் கஸகஸ்தான் - பிலாதல் ஆகிய இரண்டும், தங்களிடமிருந்த ரஷ்யாவின் அணு ஆயுதங்களை, 1996ல் ஒப்படைத்தன.
தன்னுடைய நினைவுகளில் நான் இராணுவத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவின் உடைவைக் காப்பாற்றிடலாம், என முயற்சி செய்யவில்லை என்பதற்கும் பதில் சொல்லி இருக்கின்றார் கோர்பசெவ்.
நான் நமது ராணுவத்தைக் கூர்ந்து கவனித்தபோது அது கொள்கை அளவில் பிளந்து கிடந்தது என்பதைக் கண்டேன். அவர்கள் பொதுவுடைமைக் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் மனநிலையில் இல்லை. ஆகவே அவர்களை நாம் களத்தில் இறக்கினால் "ஓர் சிப்பாய் கலகம்" ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
மக்களும் பொதுவுடைமையில் நம்பிக்கை இழந்திருந்தார்கள். அவர்களில் பலர் கிளர்ச்சியில் ஈடுபடவும் தயாராக இருந்தார்கள். இந்த வகையில் இராணுவத்தை இறக்கினால் பெரிய அளவில் "உயிர்ச் சேதங்கள்" ஏற்படும் இதனாலும் அவர்கள் நான் இராணுவத்தை இறக்கிடவில்லை எனக் கூறியுள்ளார் (தன் நினைவலையில்).
சோவியத் அதிபர் சொன்ன புதிய கொள்கை:
கம்யூனிசத்திற்குப் பதிலாக கோர்பசெவ் அவர்கள் இரண்டு புதிய கொள்கைகளை அறிமுகம் செய்தார்.
1.பிரஸ்தோரிக்கா (மறு உருவாக்கம்)
2. கிளாஸ் நோஸ்ட் (வெளிப்படைத்தன்மை)
பிராஸ்தோரிக்கா என்பதற்கு பொருளாதார சுதந்திரம் - எல்லாமே அரசுதான் என்பதிலிருந்து விடுதலை. அதாவது ஆக்கப்பட்டவை அனைத்தும் அரசுக்கே சொந்தம், அரசு பங்கிட்டுத் தருவதைப் புசியுங்கள் என்பதிலிருந்து விடுதலை.
கிளாஸ் நோஸ்ட் என்பதன் பொருள் வெளிப்படைத்தன்மை. அதாவது ரஷ்யாவின் உள் என்ன நடக்கின்றது என்பது ஒரு பெரும் காலகட்டம் வரை உலகில் யாருக்கும் தெரியாது.
ரஷ்ய அரசு என்ன அறிவிக்கின்றதோ அதுவே ரஷ்ய மக்களுக்கும், உலக மக்களுக்கும் செய்தி. இதைத்தான் (Iron Curtain) இரும்புத்திரை என்பார்கள்.
இதிலிருந்தும் ரஷ்யா விடுதலை அடைந்தது. கிளாஸ் நோஸ்ட் மூலம் எல்லாம் "வெளிப்படை" என்றானது. இதன் மூலம் 74 வருட கம்யூனிஸ ரஷ்யாவின் வரலாறு ஓர் முடிவுக்கு வந்தது. வேறுதிசையில் பயணிக்கத் தயாரானது.
இமாம் கொமைனியின் கடிதம்;
இப்படி ரஷ்யா கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப்பின் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் எனத் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில்தான், இமாம் கொமைனி(ரஹ்) அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் கம்யூனிஸ்ட் ரஷ்யாவை அழைத்தார்கள். விரிவான ஒரு கடிதத்தை எழுதி ஏழுபேர் கொண்ட ஓர் குழுவிடம் கொடுத்து அனுப்பிவைத்தார்கள்.
இமாம் கொமைனியின் கடிதம் சுருக்கம்;
கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் தலைவர் கோர்பசெவுக்கு அழுத்தம் திருத்தமாக ஓர் செய்தியைச் சொன்னார்கள்; அது, இறைவன் இருக்கின்றான். அவன் ஒருவன், அவனே அகிலங்களின் அதிபதி. இந்த இறைவன் நமது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டியிருக்கின்றான். அதைப்போல் நாட்டின் நிர்வாக முறைகளுக்கும் நிறைவாகவே வழிகாட்டியிருக்கின்றான். இந்த இறைவனை ஏற்றுக்கொள்ளுங்கள் இந்த இறைவனை - இருக்கின்ற இறைவனை இல்லை என மறுத்ததே உங்கள் கொள்கையின் வீழ்ச்சிக்கும் தோல்விக்கும் காரணம். அதேபோல் ரஷ்யா இராணுவ ரீதியாகத் தோற்றதற்கும் இதுவே காரணம்.உங்களைத் தோற்கடித்த, ஆப்கானிஸ்தான் முஜாகித்களின் வெற்றிக்குக் காரணம், அவர்கள் இறைவனை ஏக இறைவனை மட்டுமே நம்பி அவனுக்காகவே உங்களை எதிர்த்துப் போர் புரிந்ததே காரணம். அவர்களிடம் வேறு எந்த பலமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.ஆகவே அல்லாஹ்வையும், அவனது அறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த உலகிலும் இறப்பிற்குப் பின்னால் வரும் மறுஉலகிலும் வெற்றி பெறுவீர்கள்"
இந்தக் கடிதம் அப்போது உலகெங்கும் உலா வந்தது. ஆக சோவியத் ரஷ்யாவுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
With inputs from : Deccan Chronicle 26/12/2021
- மு.குலாம் முஹம்மது
வைகறை வெளிச்சம் ஆசிரியர்
Comments
Post a Comment